இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்திய அணி – லாராவின் சாதனையை முறியடித்தார் கோலி

0
37

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்திய அணி – லாராவின் சாதனையை முறியடித்தார் கோலி

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்களுடனும், ரோஹித் சர்மா 6 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. 96.1 ஓவர்களில் இந்திய அணி 400 ரன்களைக் கடந்தது.

ஆவேசமான ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 238 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் தனது இரட்டை சதத்தைக் கடந்தார். இதன்மூலம் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு அதிக (6) இரட்டைச் சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துகொண்டு, லாரா 5 இரட்டைச் சதங்கள் அடித்தது சாதனையாக இருந்தது. வினோத் காம்பிளிக்கு பிறகு அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

மேலும் இந்திய அணிக்காக அதிக முறை இரட்டைச் சதங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவக் ஆகியோருடன் இணைந்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 6 இரட்டைச் சதங்களையும், சேவக் 4 இரட்டைச் சதம் மற்றும் 2 முச்சதங்களையும் அடித்திருந்தனர்.

கோலி இரட்டைச் சதம் அடித்த சிறிது நேரத்திலேயே ரோஹித் சர்மா, தனது அரை சதத்தை எட்டினார். 102 பந்துகளில் 65 ரன்களைச் சேர்த்த அவர், சந்தகன் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அஸ்வின் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து 287 பந்துகளில் 243 ரன்களைக் குவித்த விராட் கோலியின் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் சந்தகன் வீழ்த்தினார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக விராட் கோலி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த இலங்கை அணி, தொடக்கத்திலேயே கருணாரத்னே (0), டிசில்வா (1 ரன் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. 14 ரன்களில் 2 விக்கெட்களை இழந்த நிலையில், அணியை சீரமைக்கும் முயற்சியில் திலுரூவன் பெரேராவும் மேத்யூஸும் ஈடுபட்டனர். அனால் அவர்களாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஸ்கோர் 75 ரன்களாக இருந்தபோது திலுரூவன் பெரேரா (42 ரன்கள்) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.

இலங்கை அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களாக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மேத்யூஸ் 57 ரன்களுடனும், சந்திமால் 25 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

காற்று மாசுபாட்டால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று காற்று மாசுபாடு காரணமாக 3 முறை தடைப்பட்டது.

நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியபோது இலங்கை வீரர்களில் 5 பேர் முகமூடி அணிந்து பீல்டிங்கை மேற்கொண்டனர். காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து மற்ற வீரர்களும் இதே காரணத்தைக் கூறி தொடர்ந்து ஆட தயக்கம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி அவுட் ஆனார். இதன் பிறகும் 2 முறை காற்று மாசை காரணமாக கூறி இலங்கை வீரர்கள் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினர். ஒரு கட்டத்தில் கமகே, லக்மல் ஆகியோர் மைதானத்தில் இருந்து வெளியேற, இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் லீ, பீல்டிங் செய்ய முன்வந்தார். இவ்வாறாக ஆட்டம் சுமார் 26 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். 140 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் காற்று மாசு காரணமாக, ஒரு போட்டி இடையில் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here