பாரதிராஜாவா.. பாரதிதாசனா..? வடிவேலு பாணியில் சிக்கிக் கொண்ட ஸ்டாலின் : அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம்.

0
428


பாரதிராஜாவா.. பாரதிதாசனா..? வடிவேலு பாணியில் சிக்கிக் கொண்ட ஸ்டாலின் : அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம்..!


சென்னை : மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்கிற திட்டத்தை ஜல் சக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் தெரியாமல் அறிக்கை விட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலனை அமைச்சர் எஸ்பி வேலுமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அறிவூட்டும் தினம் ஒரு தகவல் என்றால், அது தென்கச்சி சாமிநாதன், அதுவே, அரசியல் உள்நோக்கத்திலான தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு.க.ஸ்டாலின் என்று உலகமே நகைக்கும் வகையில், கொரோனா காலத்திலும், அறிக்கை அரசியல் செய்து வருகிறார் எதிர்கட்சித் தலைவர்.

மனிதனின் அடிப்படை உயிர்த் தேவையான குடிநீரை, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைவில்லாமல் தருவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிற “ஜல் ஜீவன் மிஷன்” என்கிற திட்டத்தை “ஜல் சக்தி மிஷன்” என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இப்படி, ஒரு திட்டத்தின் பெயரையே தெளிவாக சொல்லத் தெரியாதவர், அதில் குற்றத்தை கண்டுபிடித்திருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு தனது நிர்வாக அறியாமையை தமக்குத் தாமே திரையிட்டு காட்டியிருக்கிறார்.

10 இலட்சம் ரூபாய்க்கு மேலான நிதிச் செலவில் உருவாகும் திட்டங்கள் அனைத்தும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என்கிற அடிப்படை விஷயம் கூட அறியாத இவர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய்க்கு மேலான தொகையில் நடத்தப்படுகிற குடிநீர் திட்டங்களை ஏன் ஊராட்சி அமைப்புகளுக்குத் தரவில்லை என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வகித்த திரு.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன செய்வது? எழுபதுகளிலேயே வீராணம் திட்டம் என்னும் பெயரிலே கோடான கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டு, அந்த திட்டத்திற்கு சிமெண்ட் பைப்புகளை தயாரித்துக் கொடுத்த, திருக்கழுக்குன்றம் சத்திய நாராயணா சகோதரர்களையே தற்கொலை செய்து கொண்டு சாகவிட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதும், ஆனால் அதே வீராணம் திட்டத்தை, புதிய வீராணம் திட்டமாக்கி, தலைநகர் சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தது எங்கள் புரட்சித் தலைவி அம்மாவின் பொன்மனத்து அரசாட்சி என்பதையும் இப்பூவுலகம் அறியும்.

எனவே, ஒரு திட்டத்தை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றி அதனை மக்களுக்கு பயன்பாடுடையதாக்கலாம் என நினைப்பது அதிமுகவின் அரசாட்சி என்றால், ஒரு திட்டத்தை வைத்து, எந்த வகையிலெல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்று நரிக் கணக்கு போடுவது திமுக ஆட்சி. இதற்கெல்லாம் நீதியரசர் சர்க்காரியாவின் விசாரணை அறிக்கையே சாட்சி.

தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000ன்படி (Tamilnadu Tender Transperancy Act 1998 and Rules 2000) 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் மின்ஒப்பந்தப்புள்ளி வாயிலாகவே கோரப்படுகிறது. அதற்கான அனைத்து வசதிகளும் பெரும்பாலும் மாவட்ட அளவில் மட்டுமே இருப்பதால், ஊரக வளர்ச்சித் துறையை பொருத்தமட்டிலும், மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களான PMGSY, NABARD, RDIF, TNRRIS ஆகிய திட்டங்கள் மாவட்ட அளவிலேயே இவற்றிற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைப்படியே ஜல் ஜீவன் மிஷன் பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் மாவட்ட அளவிலேயே கோரப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி (Operatoonal Guidelones for the omplementatooz of Jal Jeevaz Missooz) மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, தமிழ் வளர்ச்சி – செய்தித் துறை, மத்திய அரசின் உறுப்பினர் செயலர் மற்றும் குடிநீர் வழங்கலில் மூத்த தொழில்நுட்ப வல்லூநர் ஆகியோர் அடங்கிய மாநில அளவிலான ஒரு குழுவும், மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து, குழுவின் கருத்துருவின் அடிப்படையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, திட்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு, நிதி விடுவிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த குழுக் கண்காணித்து வருகிறது.

இப்பணியை ஊரக வளர்ச்சித் துறையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயல்படுத்துகிறது.
உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அந்த மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி துறை செயற் பொறியாளரை செயலாளராகவும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட செயற் பொறியாளர், மாவட்ட வன அலுவலர், வேளாண்துறை இணை இயக்குநர், கால்நடைத் துறை இணை இயக்குநர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளின் செயற் பொறியாளர்கள், தோட்டக்கலை மற்றும் பொது சுகாதார துறை துணை இயக்குநர்கள், நெடுஞ்சாலை மற்றும் கிராமச் சாலை துறைகளின் கோட்டப் பொறியாளர்கள், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் இப்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான 16 உறுப்பினர்களைக் கொண்டு குழுவானது, இப்பணிகளை கண்காணிக்கிறது.

குறிப்பாக, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக நடைமுறைபடுத்த இருக்கும் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் (Contract Agreement)ஊராட்சி மன்றத் தலைவர், ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலர், ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பர்கள் கையொப்பமிட வேண்டும்.

மேலும், இந்த பணிகள் முடிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்படும் போதும், ஊராட்சி மன்றத் தலைவர், ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு பொறுப்பு அலுவலர், மூன்றாம் தரப்பு பொறுப்பு அலுவலர் பார்வையிட்ட பின்புதான் நிதியானது மத்திய அரசின், ஜல் ஜீவன் மிஷன் வழிகாட்டுதல்படி, மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் PMGSY, PMAY(G), MGNREGS, SBM(G) போன்ற திட்டங்களில் ஒற்றை நோடல் கணக்கில் (Single Nodal Account) இருந்து பயனாளர்களின் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படுவது போல இத்திட்டத்திலும் ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் மூலம், இத்திட்ட செயலாக்கம் நெறிபடுத்தி பணிகளை துரிதப்படுத்த, அவ்வப்போது காணொளிக் காட்சி வாயிலாக மாநில அளவிலான குழுவிடம் ஆய்வு நடத்தப்படுகிறது.

உள்ளாட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்கலுக்கென்று, கடந்த 9 ஆண்டுகளில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியிலும், அவரது ஆசியோடு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு மக்களின் பேரன்பை பெற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான ஆட்சியிலும், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு பல்வேறு பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், தனி குடிநீர்த் திட்டங்கள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட குடிநீர் வழங்கல் பணிகளுக்கென ரூ. 39,849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.22 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக தனி மின்விசை குடிநீர்த் திட்டங்கள், 15 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், 70 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் 79 நகர குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், 99 % ஊரகப் பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டு என்பதையும், அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை என்பதையும், அது காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது எங்களது கடமையாகிறது.

மத்திய அரசு, ஊரகப் பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திலும் குடிநீரினை, 2024 ஆம் ஆண்டுக்குள் வழங்கும் பொருட்டு, ஜல் ஜீவன் மிஷன் எனும் திட்டத்தினை 15.08.2019 அன்று நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் மாண்புமிகு பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்டு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர இதற்கான திட்ட வழிகாட்டுதல் கையேடும் வெளியிட்டுள்ளது.

கிராம வாரியாக மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் தற்பொழுது குடிநீர் இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டிய வீடுகள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான வலை தளத்தில் பின்வருமாறு அவ்விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 01.04.2020 நாளின்படி உள்ள விபரங்கள் பின் வருமாறு.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த கிராம ஊரட்சிகள் :12,525
தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஊரக குடியிருப்புகள் : 79,395
ஊரக குடியிருப்புகளில் உள்ள வீடுகள் : 1,26,89,045
ஊரக குடியிருப்புகளில் உள்ள குடிநீர் வீட்டிணைப்புகள் : 21,80,013
மீதமுள்ள குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டியுள்ள வீடுகள் : 1,05,09,032

மேற்கண்ட மீதமுள்ள குடிநீர் இணைப்புகளை வழங்க (1,05,09,032) 2020-21 முதல் 2023-2024 ஆகிய 4 ஆண்டுகளில் பகுதிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 100 விழுக்காடு இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் மொத்த ஒதுக்கீடான 2374.74 கோடி ரூபாயினை மார்ச் -2021க்குள் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனைகளுக்குட்பட்டு, இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டம், பில்லூர் 3வது குடிநீர் திட்டம் போன்ற எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், கடந்த 100 ஆண்டு காலத்தில் இல்லாத அளவாக ஏரி குளங்கள் யாவும், தூர்வாரப்பட்டு, வருண பகவானை வரவேற்கும் வகையிலும், கரிகாலன் காலத்தை கண்முன்னே நிறுத்தும் வகையிலும், தமிழகத்தில் நீர்மேலாண்மைத் திட்டங்கள் உலகம் வியக்கும் வகையில் உழவன் வீட்டில் உதித்த முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியாரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒட்டுமொத்த தேசமே வியந்து பாராட்டுகிறது.

ஆனால், இதனையெல்லாம் மனம் திறந்து வாழ்த்துகிற பெருந்தன்மையற்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், குற்றம் சுமத்துவது, ஆதாரமில்லாமல் அவதூறுகள் பரப்புவதும், கோர்ட்டுக்கு போவேன் என்று மிரட்டுவது, சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளை பழி வாங்குவோம் என அச்சுறுத்துவது, கோர்ட்டுக்கும் போவது, அங்கே நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவதென திமுகவும், அதன் தலைமையும் தொடர்ந்து தனது பொறுப்பற்ற அரசியலால் நீதித் துறை தொடங்கி, பொது மக்கள் வரை சகல நிலையிலும் மதிப்பிழந்து நின்ற போதிலும், தங்களுக்கு ஒரு அரசியல் விளம்பரம் கிடைக்கும் என்கிற மலிவான நப்பாசையில் எந்த ஒரு குற்றச்சாட்டின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், அறிக்கை விடுப்பது வேதனைக்குரியது ஆகும்.

மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என்றெல்லாம் இத்தனை பதவிகளில் அமர்ந்த போதும், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வரை முரண்பாடான அறிக்கைகளை விடுவதும், தவறான தகவல்களை பரப்புவதும், உண்மைக்கு மாறான புள்ளி விவரங்களை சொல்வதுமென அவரது அறிக்கை அரசியல் அவரது தரத்தை தாழ்த்துவதாகவே இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here