தமிழக சிபிசிஐடி காவல்துறையின் எச்சரிக்கை!

0
33

தூத்துக்குடி: சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவுகிறது, இது தொடர்பாக இணையத்தில் பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ் / பெனிக்ஸ் மரண விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில் இரண்டு நாள் முன் எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வரும் குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்களுடன் இணையத்தில் சிலர் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்று கூறி வேறு சிலரின் புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் அவர்கள் குறித்து பொய்யான செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் வகையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பாக பொய்யான புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள்.

முக்கியமாக அவர்களின் உடல்களை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பரப்பி வருகிறது. அந்த நிறுவனம் ஜெயராஜ், பென்னிக்சின் காயமடைந்த உடல் என்று பொய்யான புகைப்படங்களை பரப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க தவறு. அவர்களின் உடலில் இருக்கும் காயங்கள் மார்ப் செய்யப்பட்டு உள்ளது. மார்ப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து சில நிறுவனங்கள் பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இணையத்தில் இந்த வழக்கு தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப கூடாது. அப்படி தொடர்ந்து வதந்திகளை பரப்பும் நபர்கள் குறித்த மக்கள் புகார் அளிக்கலாம். சிபிசிஐடி கண்டிப்பாக இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில் பொய்யான புகைப்படங்களை பகிர்வது தவறாக முடியும். அது விசாரணைக்கு இடைஞ்சல் விளைவிக்கும். இதனால் விசாரணை சரியான கோணத்தில் செய்ய முடியாத சூழல் ஏற்படக்கூடும். அதனால் மக்கள் இது போன்ற பொய்யான வதந்திகளை பரப்பாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here