ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

0
12

ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

மாட்ரிட்:

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்பானீஸ் சூப்பர் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் பார்சிலோனா அணியை 1-3 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை தொடர் கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதில், ஸ்பெயினின் முக்கிய கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த முக்கிய போட்டியை காண ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தனர். பார்சிலோனா அணியிலிருந்த முக்கிய வீரரான நெய்மர் பாரீஸ் அணிக்குச் சென்று விட்டதால், பார்சிலோனா தடுமாறும் என ரசிகர்கள் போட்டிக்கு முன்னதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி, சுவாரஸ் ஆகியோர் அணியில் உள்ளதால் ரியல் மாட்ரிட்டை பார்சிலோனா வீழ்த்தும் எனவும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பிலும் அனல் பறந்தது.

வீரர்களுக்கிடையே முட்டல், மோதல்களுக்கும் பஞ்சமில்லாமல் சென்ற முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். பிற்பாதி ஆட்டம் தொடங்கிய 50-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நடுகள வீரர் பிக்கியூ சேம் சைடு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றதால் பார்சிலோனா அணி வீரர்கள் தீவிரமாக கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்கு பலனாக 77-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பை வீணாக்காமல் மெஸ்ஸி கோலாக மாற்றினார். ஆட்டம் சமனாக சென்ற சில நிமிடங்களிலேயே பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக ரியல் மாட்ரிட் அணியின் தூணாக இருக்கும் ரொனால்டோ 80-வது நிமிடத்தில் அசத்தலாக கோல் அடிக்க மீண்டும் அந்த அணி முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிவடைய சிறிது நேரமே இருந்ததால் பார்சிலோனா அணியினர் அதிரடி தாக்குதல்களில் இறங்கினர். ஆனால், அவர்களது முயற்சி ரியல் மாட்ரிட் வீரர்களின் முன் பலிக்கவில்லை. ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ரொனால்டோ, மெஸ்ஸியை வெறுப்பேற்றும் விதமாக தனது டி-ஷர்ட்டை கழற்றி ரசிகர்களிடம் கான்பித்தார். இதனால், அவர் சிவப்பு அட்டை பெற்று களத்திலிருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் கடந்த முறை பெற்ற தோல்விகளுக்கு ரியல் மாட்ரிட் அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here