ஐஎஸ்எல் சென்னைக்கு 2-ஆவது வெற்றி

0
31

ஐஎஸ்எல் சென்னைக்கு 2-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி புணே சிட்டி அணியை வீழ்த்தி தனது 2-ஆவது வெற்றியை பதிவு செய்தது.
புணே நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் ஹென்ரிக் செரீனோ கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியைக் காண மொத்தம் 9,881 பார்வையாளர்கள் மைதானத்துக்கு திரண்டிருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சென்னை-புணே அணிகள் ஒன்றுக்கொன்று சவாலளிக்கும் வகையில் விளையாடின. இரு அணிகளின் பின்கள வீரர்களும் அரண் போல் செயல்பட்டதால், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது.

பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியின் 52-ஆவது நிமிடத்தில் புணே அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை அதன் வீரர் ரஃபா லோபஸ் நூலிழையில் கோல் கம்பத்துக்கு வெளியே அனுப்பி வீணடித்தார். இதேபோல், ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் சென்னையின் அருமையான கோல் வாய்ப்பையும் அவர் நூலிழையில் தடுத்தார்.
சென்னை வீரர் அடித்த பந்தை புணே கோல் கீப்பர் தவறவிட, அது கோல் கம்பத்தின் எல்லைக் கோட்டை தொடும் நிலைக்குச் சென்றது. அப்போது பாய்ந்து வந்த ரஃபா, பந்தை லாவகமாக வெளியில் கடத்தி, அது கோலாகாமல் தடுத்தார். எனினும், கோல் இன்றி தொடர்ந்த ஆட்டத்துக்கு 82-ஆவது நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் சென்னை கேப்டன் ஹென்ரிக் செரீனோ.

அணியின் சக வீரர் அடித்த பந்தை மிகச் சரியான தருணத்தில் பாய்ந்து, மிகத் துல்லியமாக தலையால் முட்டி அவர் கோலடித்தார். இதனால் கடைசி நேரத்தில் சென்னை 1-0 என முன்னிலை பெற்று புணேவுக்கு நெருக்கடி கொடுத்தது. எஞ்சிய நேரத்தில் எவ்வளவு முயன்றும், சென்னையின் தடுப்பை தாண்டி புணேவால் தனது கோல் வாய்ப்பை எட்ட இயலவில்லை. இதனால் இறுதியில் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டம் சமன்: இதனிடையே, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா
ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here