டெல்லியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்: பன்னீரை எச்சரித்த சென்னை ஆடிட்டர்!

0
101

டெல்லியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்: பன்னீரை எச்சரித்த சென்னை ஆடிட்டர்!

அதிமுகவில் எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் இருப்பது வெளிப்படையாக தெரிந்தாலும், எடப்பாடியும், பன்னீரும் மோடி அணி என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இருவரும் இணைய வேண்டும் என்று டெல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. தினகரன் எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இந்த இரு அணிகளும் இணைய தயாராக இருக்கின்றன.

ஆனாலும், பன்னீர் அணியின் சார்பில் மறைமுகமாக வைக்கப்படும் சில நிபந்தனைகள், அணிகள் இணைப்புக்கு கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதையடுத்து, மோடிக்கு நெருக்கமான சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரே அணிகள் இணைப்பு விஷயத்திற்கு பொறுப்பேற்று, தொடர்ந்து இரு தரப்பினருடனும் ஆலோசித்து பேசி முடித்தார்.

அதனால், அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு நேற்று இரவே வெளியாகும் என்றும், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில், எடப்பாடியும், பன்னீரும் சந்தித்து அந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பன்னீர் அணியில் உள்ள முக்கிய தலைவர்கள், கட்சியின் பி.பார்மில் கையெழுத்திடும் வகையிலான பதவி, பன்னீருக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

மேலும், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன் போன்றவர்களுக்கு பதவி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாலும், அணிகள் இணைப்பு குறித்த முடிவுக்கு வரமுடியாமல், பன்னீர் நடத்திய ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பன்னீரின் அம்மாவை நலம் விசாரிக்க சென்ற அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், நீங்கள் விடுத்த கோரிக்கை இரண்டையும் முதல்வர் நிறைவேற்றிய பின்னரும், இன்னும் ஏன் தாமதம் என்று பன்னீரிடம் கேட்டு விட்டனர்.

ஆனால், தாமதப்படுத்த வில்லை, எங்கள் அணி தலைவர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு, விரைவில் நல்ல பதில் சொல்கிறேன் என்று மட்டும் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் பன்னீர்.

ஆனாலும், அதன் பின்னர் பன்னீர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஒருமித்த முடிவு எட்டப்படாததால், இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.

டெல்லி மேலிடம் வலியுறுத்தியதை அடுத்து, எடப்பாடி தரப்பில் இருந்து, பன்னீருக்கு சாதகமான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து, சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிட தயாராக இருப்பதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

ஆனாலும், பன்னீர் அணியில் எம்.எல்.ஏ, எம்.பி போன்ற எந்த பதவியிலும் இல்லாத கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் போன்றவர்களுக்கு சரியான பதவிகள் வேண்டும் என்பதற்காகவும், பன்னீருக்கு பி.பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தர வேண்டும் என வலியுறுத்தப்படுவதால், அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக தாமதமாகி விட்டது.

இதனிடையே, அணிகள் இணைப்பு பணியை நடத்திய சென்னை ஆடிட்டர், நீங்கள் விடுத்த கோரிக்கை அனைத்தையும், எடப்பாடி நிறைவேற்றிய பின்னரும், அணிகள் இணைப்பை தாமதப்படுத்தினால், டெல்லியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று பன்னீரிடம் சற்று கடுமையாகவே பேசி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

எனவே, அணியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் சம்மதிக்க வைத்து, அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை பன்னீர் விரைவில் அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here