அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது.

0
218

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது.

இதில் பா.ம.க, புரட்சி பாரதம், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் அம்மா முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய தினகரன்,

அம்மாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பதற்கு அடுத்த மாதம் தெருத் தெருவாக சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 நாள்கள் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து அவர்களின் துரோகச் செயலை எடுத்துக் கூறவிருக்கிறேன்.

அவர்களின் துரோகச் செயலை அறிந்து இன்று பா.ம.க, புரட்சி பாரதம், தி.மு.க, துரோகிகள் அணி, தீபா அணி என எல்லா கட்சிகளில் இருந்தும் நம் பக்கம் வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நமக்கு குக்கர் சின்னம் ஒதுக்கினார்கள். குக்கர் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. துரோகிகள் கையில் இருந்து இரட்டை இலையை மீட்போம்.

நம்மிடம் உண்மையான அம்மாவின் விசுவாசிகளும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அங்கு மண்டை ஓடுகளும் எலும்புக் கூடுகளும் இருக்கின்றன.

ஆட்சி முடிந்ததும் சேலத்துக்கு மண்டை ஓடு மட்டும் வரும். நான் தருமபுரியில் இருந்து வரும்போது விமான நிலையத்தின் அருகே 200-க்கும் மேற்பட்டவர்கள் வழியில் நின்று அவர்கள் நிலங்களை மத்திய அரசு எடுக்க இருப்பதாகவும், அதற்கு அண்ணன் பழனிசாமி முனைப்பு காட்டுவதாகவும் சொன்னார்கள்.

நாங்கள் உங்களின் உரிமைக்காகப் போராடுவோம். காவிரியாக இருந்தாலும் மீனவ பிரச்னையாக இருந்தாலும், தொழிலாளர் பிரச்னை, நெசவாளர் பிரச்னை, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், கூடங்குளம், மீத்தேன் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

அதையடுத்து, மாற்றுக்கட்சியில் இருந்து பலர் விலகி தினகரன் அணியில் இணைந்தாலும், பா.ம.க-விலிருந்து முக்கிய பிரமுகர்களான பா.ம.க மாநிலத் துணைப் பொது செயலாளரும் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவருமான சண்முகம் தலைமையில் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராஜா, ஜெயவேல், மலை பெருமாள், வன்னியர் சங்க முன்னாள் மாநிலத் துணை தலைவர் கணேசன், கெங்கவல்லி சட்டமன்ற வேட்பாளர் சண்முகவேல் மூர்த்தி உட்பட பா.ம.க-விலிருந்து அதிக பேர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here