பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு: உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் டிடிவி தினகரன்

0
66

பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு:
உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் டிடிவி தினகரன்

நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையையட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையை சில தனிநபர்கள் கைப்பற்றி வெளி மார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்கவேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டிற்கு கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது? இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது?

இரண்டு அடி நீளக் கரும்பு சந்தையில் அதிகபட்சம் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், 15 ரூபாய் என்று கணக்கு காட்டி, சுமார் 20 கோடி ரூபாய் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இது யாருக்குப் போனது? என்றெல்லாம் பல கேள்விகளை இதன் பின்னணியை அறிந்தவர்களும் பத்திரிகைகளும் எழுப்பி வருகின்றனர்.
முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்து என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் ஆளும் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர் புகுந்து இலவசமாக வழங்கப்பட்ட 1000 ரூபாயில் 100 ரூபாயை பயனாளிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு போனதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது. இப்படி நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடந்த தவறுகளைத் திருத்தி, மீதமுள்ளவர்களுக்காவது நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று தனது அறிக்கையில் டிடிவி தினகரன் MLA அவர்கள்
தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here