ரூ.4,999 விலையில் ‘ரெட்மி 5ஏ’ ஸ்மார்ட்போன்

0
45

ரூ.4,999 விலையில் ‘ரெட்மி 5ஏ’ ஸ்மார்ட்போன்

redmi5a

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் ரூ.4,999 விலையில் ‘ரெட்மி 5ஏ’ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து ஜியோமி நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் கூறியது:

அதிநவீன தொழில்நுட்பம் பொருந்திய குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்ததில் ஜியோமி பெருமிதம் கொள்கிறது. அந்த வகையில் தற்போது, அனைத்து நவீன அம்சங்களும் அடங்கிய ‘ரெட்மி 5ஏ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உருவான இந்த ஸ்மார்ட்போன் 5 அங்குல திரை, 1.4 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ப்ராஸஸர், 5 எம்பி முன்பக்க கேமரா, 13 எம்பி பின்பக்க கேமரா, 3,000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.

2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்நினைவகத்திறன் கொண்ட மாடலின் விலை ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விற்பனையாகும் 50 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு மட்டுமே இந்த சலுகை விலை பொருந்தும். அதன் பிறகு விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.5,999 ஆக இருக்கும். ஜியோமியை இந்தியாவின் நம்பர் 1 பிராண்டாக ஆக்கிய எங்களின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இந்த ரூ.1,000 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனம், ரூ.500 கோடியை ரெட்மி பிரியர்களுக்காகவே திரும்ப அளிக்க வுள்ளது.

3ஜிபி ரேம், 32 ஜிபி உள்நினைவகத் திறன் கொண்ட ‘ரெட்மி 5ஏ’ மற்றொரு மாடலின் விலை ரூ.6,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக ‘ரெட்மி 4ஏ’ மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு மாதத்துக்குள்ளாகவே 40 லட்சம் விற்பனையாகி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்தே இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ரெட்மி 5ஏ’ வரும் டிசம்பர் 7ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரவுள்ளது என்றார் அவர்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங்குக்கு சீனாவின் ஜியோமி கடும் போட்டியாகத் திகழ்ந்து வருகிறது. ஐடிசி ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக்கையில், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்திய சந்தையில் இரண்டு நிறுவனங்களும் தலா 23.5 சதவீத சந்தைப் பங்களிப்பை பெற்று முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here