சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக பிசிசிஐ புதிய முடிவு!

0
35

சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக பிசிசிஐ புதிய முடிவு!

10.

சச்சின் சட்டையில் பொறிக்கப்பட்ட எண். இதனால் இந்த எண் சச்சின் ரசிகர்களுக்கும் பிடித்தமானது.

இந்த எண்ணை மும்பை வீரர் ஷர்துல் தாக்குர் பயன்படுத்தியபோது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம், இலங்கைக்கு எதிரான 4-வது கிரிக்கெட் போட்டியில் ஷர்துல் தாக்குர் அறிமுகமானார். அவருக்கு சச்சினின் 10-ம் எண்ணை ஒதுக்கியிருந்தது பிசிசிஐ. அவரும் அந்த எண் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். இதைக் கண்ட சச்சின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சச்சினின் பிரத்யேக எண்ணான 10-ஐ இன்னொரு வீரருக்கு ஒதுக்கக்கூடாது என்று பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார்கள். சமூகவலைத்தளங்களில் இதுகுறித்த ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஆனால் ஷர்துல் தாக்குருக்கு 10-ம் எண் ஒதுக்கப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆகாஷ் சோப்ரா இதுபற்றி கூறியதாவது: இதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை. தனக்கான எண்ணைத் தேர்வு செய்ய ஷர்துல் தாக்குருக்கு உரிமை உண்டு. எனவே அவர் அந்த எண்ணைத் தேர்வு செய்துள்ளார். இதற்காக அவரை ஏன் கிண்டலடிக்கவேண்டும்? என்று கூறினார். ஹர்பஜன் சிங் கூறியதாவது: அந்த எண் கொண்ட சட்டையை அணிந்தால் என்ன தவறு? சச்சினுக்கான ஷர்துல் தாக்குரின் சமர்ப்பணமாகவும் அதை எடுத்துக்கொள்ளலாம். 10 என்பது ஷர்துலின் ராசியான எண்ணாகவும் இருக்கலாம். அந்த எண் கொண்ட சட்டையை இன்னொருவர் அணிவதில் சச்சினுக்கும் கூடப் பிரச்னை எதுவும் இருக்காது என்று கூறினார்.

சரி, இந்த எண்ணை ஷர்துல் தாக்குர் தேர்வு செய்யக் காரணம் என்ன?

என் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகை 10. (1991-ம் வருடம் அக்டோபர் 16-ம் தேதி பிறந்துள்ளார். 16+10+1991). எனவே அந்த எண்ணைத் தேர்வு செய்துள்ளேன் என அப்போது பதில் அளித்தார் ஷர்துல் தாக்குர். ஆனால் சர்ச்சைகளுக்குப் பிறகு ஷர்துல் 10-ம் எண் பொறிக்கப்பட்ட சட்டையை அணியவில்லை. அக்டோபரில் இந்திய அணிக்கு அவர் மீண்டும் தேர்வானபோது பயிற்சி ஆட்டங்களில் 54-ம் எண் கொண்ட சட்டையை அணிந்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ புதிய முடிவு ஒன்று எடுத்துள்ளது. அதன்படி, இனிமேல் 10-ம் எண் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் அளிக்கப்படாது. அந்த எண் கொண்ட சட்டையை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் அணிந்துகொள்ளலாம். ஆனால் 10-ம் எண்ணை சர்வதேசப் போட்டிகளில் எந்த ஒரு வீரரும் பயன்படுத்தக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 10-ம் எண் கொண்ட சட்டையை அணிந்து சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டால் சர்ச்சைகள் உருவாவதால் அதைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த உத்தரவுக்குச் சம்மதம் அளித்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here