சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது

0
19

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது

நத்தம்,

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருச்சி வாரியர்சும் கோதாவில் இறங்கின.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை பெய்ததால் ஆட்டம் 1¾ மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. டாஸ் ஜெயித்த கில்லீஸ் கேப்டன் சதீஷ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாபா இந்த்ராஜித்தும், பரத் சங்கரும் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் (5.2 ஓவர்) எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். பரத் சங்கர் 25 ரன்னிலும் (20 பந்து, 5 பவுண்டரி), அடுத்து வந்த அகில் ஸ்ரீநாத் 23 ரன்னிலும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாபா இந்த்ராஜித் 34 ரன்னிலும் (30 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினர்.

மிடில் ஓவர்களில் கில்லீஸ் பவுலர்கள் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். 10 முதல் 14 ஓவர்கள் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை. ஆனால் கடைசி கட்டத்தில் கிரிதர் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். பீல்டிங்கில் தடுமாறிய கில்லீஸ் வீரர்கள் இரண்டு கேட்ச்களை நழுவ விட்டனர். இல்லாவிட்டால் திருச்சி அணியின் நிலைமை மோசமாகி இருக்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் திருச்சி அணி 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் யோமகேஷ் 3 விக்கெட்டுகளும், தமிழ்குமரன் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், அலெக்சாண்டர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 133 ரன்கள் இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தலைவன் சற்குணமும், கோபிநாத்தும் அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர். ஸ்கோர் 63 ரன்களாக (8.4 ஓவர்) உயர்ந்த போது தலைவன் சற்குணம் 42 ரன்களில் (33 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். கோபிநாத் 28 ரன்களிலும், அடுத்து வந்த வசந்த் சரவணன் ரன் ஏதுமின்றியும் ஆட்டம் இழந்தனர்.

இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு லேசான நெருக்கடி உருவானது. இந்த சூழலில் அந்தோணி தாசும், சசிதேவும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். அந்தோணி தாஸ் தடாலடியாக சில சிக்சர்களை விரட்ட, திருச்சியின் நம்பிக்கையை முற்றிலும் சீர்குலைந்தது. வெற்றியை நெருங்கிய சமயத்தில் சசிதேவ் 24 ரன் (15 பந்து, 2 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். அதன் பிறகு அந்தோணி தாஸ் சிக்சர் அடித்து ஆட்டத்தை மங்களரமாக நிறைவு செய்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தோணி தாஸ் 39 ரன்களுடன் (22 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.

6-வது ஆட்டத்தில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தகுதி பெற்றது. முதலாவது சீசனிலும் கில்லீஸ் அணி 2-வது சுற்றுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனேகமாக இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோத வேண்டி இருக்கும்.

அதே சமயம் 4-வது தோல்வியை தழுவிய திருச்சி வாரியர்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here