அகில இந்திய கால்பந்துப் போட்டி நடைபெறுவதையொட்டி ரூ. 4 கோடியில் சர்வதேச தரத்துடன் தயாராகும்கோவை நேரு விளையாட்டு அரங்கம்: புதுப்பொலிவுடன் சீரமைக்கிறது ‘சென்னை சிட்டி கால்பந்து கழகம்

0
30

அகில இந்திய கால்பந்துப் போட்டி நடைபெறுவதையொட்டி ரூ. 4 கோடியில் சர்வதேச தரத்துடன் தயாராகும்கோவை நேரு விளையாட்டு அரங்கம்: புதுப்பொலிவுடன் சீரமைக்கிறது ‘சென்னை சிட்டி கால்பந்து கழகம்

கோவை நேரு விளையாட்டு அரங்கை பொலிவுபடுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, சென்னை சிட்டி கால்பந்து கழகத் தலைவர் ரோஹித் ரமேஷ், இணை தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி. அருகில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகாட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி. – படம்: ஜெ.மனோகரன்

அகில இந்திய அளவிலான கால்பந்துப் போட்டிகள் கோவையில் நடைபெற உள்ளதையொட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு இணையாக, புதுப்பொலிவுடன் சீரமைக்கிறது சென்னை சிட்டி கால்பந்துக் கழகம்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ‘ஹீரோ ஐ லீக்’ தேசிய அளவிலான கால்பந்துப் போட்டி வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சிட்டி கால்பந்துக் கழக அணி மற்றும் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான், சர்ச்சில் பிரதர், மினர்வா, இந்தியன் ஏரோஸ், நெரோகா, ஐஸ்வால், ஷிலாங், கோகுலம் கேரளா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு மோத உள்ளன. சென்னை சிட்டி கால்பந்துக் கழக அணியில் சர்வதேச கால்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட இந்த தொடரின் ஆட்டங்கள் இம்முறை கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.

ரூ.4 கோடி மதிப்பில்

இதற்காக கோவை நேரு விளையாட்டு அரங்கை ரூ.4 கோடி மதிப்பில், சர்வதேச அளவிலான கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்றுகிறது சென்னை சிட்டி கால்பந்துக் கழகம். வசதியான புல் தரை, நவீன வசதிகள் கொண்ட உடை மாற்றும் அறைகள், ஓய்வறைகள், 2 அதிநவீன மின்கோபுர விளக்குகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. நேரு விளையாட்டு அரங்கை மேம்படுத்தி, போட்டிகளை நடத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

சென்னை சிட்டி கால்பந்துக் கழக தலைவர் ரோஹித் ரமேஷ், இணை தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர். இதன் மூலம் பிபா விதிகளின்படி சர்வதேச தரம்மிக்க மைதானமாக சென்னைக்கு அடுத்து, கோவை நேரு விளையாட்டு அரங்கும் திகழும்.

அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். காலத்தில் கட்டப்பட்ட நேரு விளையாட்டு அரங்கை நவீனப்படுத்தி, சர்வதேச தரத்துக்கு இணையான விளையாட்டு மைதானமாக மாற்றுவது பாராட்டுக்குரியது. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.

விளையாட்டு வீரர்களின் சீருடைகளை வெளியிட்ட நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘கோவை நேரு விளையாட்டு அரங்கை மேம்படுத்தும் சென்னை சிட்டி கால்பந்து அணிக்கு, கோவை மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கு நடைபெறும் அகில இந்திய கால்பந்துப் போட்டிக்கு தமிழக அரசு மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். விளையாட்டு மேம்பாட்டுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில் தேசிய கால்பந்துப் போட்டி மற்றும் சென்னை சிட்டி கால்பந்துக் கழகம் குறித்து ரோஹித் ரமேஷ் அறிமுக உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here