உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்

0
23

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி இன்று தொடக்கம்

முன்னணி 8 அணிகள் பங்கேற்கும் உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

புவனேஸ்வரம்,

‘டாப்-8’ அணிகள் பங்கேற்கும் 3-வது மற்றும் கடைசி உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அர்ஜென்டினா, 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 4-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து, 9-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் உலக மற்றும் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, ஆசிய சாம்பியனும், 6-வது இடத்தில் உள்ள இந்தியா, 5-வது இடம் வகிக்கும் ஜெர்மனி, 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் எல்லா அணிகளும் நாக்-அவுட் சுற்றான கால்இறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று ‘பி’ பிரிவில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெர்மனி-இங்கிலாந்து (மாலை 4.45 மணி) அணிகள் மோதுகின்றன. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா (இரவு 7.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி, மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சமீபகாலங்களில் வீழ்த்தியது கிடையாது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு உண்மையில் இந்த தொடர் தான் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜோட் மர்ஜின் பயிற்சியில் இந்திய அணி சந்திக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பான இளம் வீரர்களும் சமவிகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். சொந்த மண்ணில் இந்திய அணி வெற்றிக்கொடி நாட்டுவதற்கு தீவிரம் காட்டும். உலக ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 2015-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறது.

புதிய பயிற்சியாளர் காலின் பாட்ச் வழிநடத்துதலில் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் களம் காணுகிறது. ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு, இந்திய அணி ஈடுகொடுத்து விளையாடுவது என்பது எளிதான காரியம் அல்ல. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

உலக ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஆகாஷ் அனில் சிக்தே, சுரஜ் கர்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத்சிங், அமித் ரோஹிதாஸ், திப்சன் திர்கே, வருண்குமார், ருபிந்தர் பால்சிங், பிரேந்திர லக்ரா, நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), உத்தப்பா, சுமித், கோதாஜித்சிங், முன்களம்: எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப்சிங், மன்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here